நீயும் பொம்மை நானும் பொம்மை

எங்கள் வகுப்பறைச் செயல்பாடுகளில் பொம்மலாட்டத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வகுப்பு மாணவர்களையும் ஈர்க்கக்கூடிய ஒரு கலை அது. பொம்மையைப் பார்த்தவுடன், அதை எப்படியாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்குள் வந்துவிடும்.
சிலர் பொம்மையை வாங்கித் தொட்டுப் பார்த்துவிட்டு,
“சார்… இதை வைத்து பேசிப் பார்க்கலாமா?”
என்று கேட்பார்கள்.
பேசத் தொடங்கியதும் போதும்…
பொம்மையின் குரலைப் போல கீச்சுக் குரலில்,
“எல்லாரும் சாப்பிட்டீங்களா?
எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கீங்களா?
ஜோரா கைதட்டுங்க!”
என்று பேசத் தொடங்குவார்கள்.
அந்தக் கணத்தில், அது வெறும் பொம்மையாக இருப்பதில்லை. அவர்களின் கைகளில் அதற்கு உயிர் வந்துவிடுகிறது.
திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு, பொம்மையை மட்டும் வெளியே காட்டி, பொம்மையே பேசுவதுபோல நடிப்பது குழந்தைகளுக்கு ஓர் அற்புதமான அனுபவம். தங்கள் முகம் தெரியாமல், பொம்மையின் முகத்தின் வழியாகத் தங்களுடைய குரலையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்கள்.
பொம்மை பேசுகிறது…
குழந்தை பேசுகிறது…
ஆனால் பேசுவது யார் என்று தெரியவில்லை!
அந்த மர்மமும், விளையாட்டும், நடிப்பும் சேர்ந்து வகுப்பறையை ஒரு சிறிய நாடக மேடையாக மாற்றிவிடுகிறது.
இந்த அனுபவத்தில் கலந்து கொண்டு மகிழ்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. ஒருவர் பொம்மையை இயக்குகிறார்; இன்னொருவர் குரல் கொடுக்கிறார்; மற்றொருவர் கதையைத் தொடர்கிறார். இப்படிப் பல குழந்தைகள் இணைந்து ஒரு சிறிய உலகத்தையே உருவாக்கிவிடுகிறார்கள்.
பொம்மை தனியாகக் கதை சொல்லாது.
குழந்தையின் கையில் சென்றால்தான் அது பேசத் தொடங்கும்.
பொம்மை போன்றே இருக்கும் குழந்தைகளின் கைகளில், ஒரு பொம்மை ஆயிரம் கதைகளைச் சொல்லத் தொடங்குகிறது.
**********



Comments