சிரிப்புக்கு மார்க்

Credit: KVT School, Madurai
“படித்தால் நல்ல மார்க் வாங்கலாம்” என்று சொல்வதைத்தான் நாம் அதிகமாகக் கேட்டிருக்கிறோம். ஆனால் எங்கள் வகுப்பறையில் நாங்கள் சொல்வது கொஞ்சம் வித்தியாசமானது — “சிரித்தால் மார்க்!”
ஒவ்வொருவரையும் எழுந்து நின்று சிரிக்கச் சொல்வோம். யார் சத்தமாகவும், நீளமாகவும், மனம் விட்டும் சிரிக்கிறார்களோ அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகளும் கிடைக்கும்.
இது ஒரு சாதாரண சிரிப்புச் செயல்பாடு போலத் தோன்றலாம். ஆனால் அந்தச் சில நிமிடங்களில் குழந்தைகளின் மனதில் இருக்கும் பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. கவலைகளை மறந்து, மனதைத் திறந்து சிரிப்பதற்கான ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது.
சில குழந்தைகள் சிரிக்கவே முடியாமல் நிற்பார்கள்.
“சார், எனக்குச் சிரிப்பே வரமாட்டேங்குது சார்.”
“சார், சிரிப்பெல்லாம் மறந்து போச்சு சார்.”
“நீங்களே எங்களைச் சிரிக்க வைக்கணும் சார்!”
என்று சொல்லும் குழந்தைகளையும் சந்தித்திருக்கிறோம்.
அந்த வார்த்தைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிரிப்பு என்பது நம் வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதிதானே! அதை நாம் எப்போது மறந்துவிட்டோம்?
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட வாழ்க்கையின் அவசரத்தில் சிரிப்பைத் தொலைத்துவிடுகிறோம். அதனால், வகுப்பறையில் இப்படிப்பட்ட சிறிய செயல்பாடுகளுக்குக் கூட ஒரு பெரிய அர்த்தம் இருக்கிறது.
சிரிக்காத குழந்தையையும் சிரிக்க வைப்பது மட்டுமல்ல; “சிரிப்பதும் கற்றலின் ஒரு பகுதியே” என்பதை அந்தக் குழந்தைக்கு உணர்த்துவதுதான் இந்தச் செயல்பாட்டின் நோக்கம்.
சில நேரங்களில் ஒரு குழந்தை வகுப்பறைக்குள் கொண்டு வரும் கவலைகளை ஒரு புத்தகப் பாடம் அகற்ற முடியாமல் போகலாம். ஆனால், நண்பர்களோடு சேர்ந்து மனம் விட்டுச் சிரிக்கும் அந்தச் சில நிமிடங்கள், அந்தக் குழந்தையின் மனதை இலகுவாக்கிவிடலாம்.
அதனால்தான் எங்கள் வகுப்பறையில்,
“படித்தால் மார்க்” என்பதோடு
“சிரித்தால் மார்க்” என்பதற்கும் இடம் உண்டு.
ஏனெனில், மகிழ்ச்சியாக இருக்கும் மனம்தான் கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கும்.



Comments