top of page

குழந்தைகள் தரும் செய்தி

Writer: Drama Selvam
Drama Selvam
Sep 29
1 min read

பொதுவாக எல்லா வகுப்பறைகளிலும் செய்தித்தாள் கிடைக்கும். அந்தச் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு, “இதில் உங்களுக்குத் தோன்றிய எதையாவது ஒன்றைச் செய்யுங்கள்” என்று குழந்தைகளிடம் சொன்னால், முதலில் அவர்கள்,


“என்ன செய்யலாம் சார்?”என்று கேட்பார்கள்.


“உங்களுக்குத் தோன்றியதைச் செய்யுங்கள்” என்றதும், ஒருவர் கப்பல் செய்யத் தொடங்குவார். இன்னொருவர் பட்டம் செய்வார். மற்றொருவர் ஒரு மனித உருவத்தை உருவாக்குவார். இப்படியாக ஒவ்வொருவரும் தங்களுடைய கற்பனைக்கேற்ப படைக்கத் தொடங்குவார்கள்.


செய்தித்தாளில் என்ன செய்தி வெளியாகியிருந்தாலும், குழந்தைகளின் கைகளில் அது வேறொரு வடிவம் பெறுகிறது. அங்கே இருந்த செய்தி மறைந்து, அவர்கள் உருவாக்கிய கப்பல், பட்டம், படம், பொம்மை போன்ற படைப்புகளே மிஞ்சுகின்றன.


சில குழந்தைகள் செய்தித்தாளில் இருந்த முகங்களைப் பார்த்து, அதே முகங்களைத் தங்களுடைய கற்பனையில் வரைந்து மகிழ்கிறார்கள். தங்களுடைய படைப்பை மற்றவர்களிடம் காட்டும்போது, அவர்களின் முகங்களில் தெரியும் பெருமையும் மகிழ்ச்சியும் சொல்ல முடியாதவை.


ஒரு சாதாரண செய்தித்தாள், அவர்களுடைய கைகளில் ஒரு கலைப்பொருளாக மாறுகிறது. அதைவிட முக்கியமாக, “என்னால் ஒன்றை உருவாக்க முடியும்” என்ற உணர்வை அது அவர்களுக்குள் உருவாக்குகிறது.


அப்போது குழந்தைகள் நமக்குத் தரும் செய்தி ஒன்றுதான்:


“வாய்ப்பு கொடுங்கள்…

நாங்கள் படைக்கிறோம்!”


இதுதான் குழந்தைகள் நமக்குத் தரும் மிகப் பெரிய செய்தி.

Comments


bottom of page