எப்படி மடிச்சாலும் ஏதோ வந்துச்சு..

இப்படி மடித்தேன்…
கொக்கு வந்துச்சு!
அப்படி மடித்தேன்…
வாத்து வந்துச்சு!
எப்படி மடித்தாலும்
ஏதோ வந்துச்சு…
தொட்டுப் பார்த்தேன்…
உசுரு வந்துச்சு!
இப்படித்தான் காகித மடிப்புக் கலையான ஓரிகாமி வகுப்பில் குழந்தைகள் பாடத் தொடங்கிவிடுகிறார்கள். விரித்துக் கொடுத்த ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு, தங்களுக்குத் தெரிந்ததைச் செய்யத் தொடங்குகிறார்கள்.
கத்திரிக்கோல் தேவையில்லை.
ஸ்கேல் தேவையில்லை.
பென்சில் தேவையில்லை.
தேவைப்படுவது ஒரு காகிதமும், அதை மடிக்கத் தயாராக இருக்கும் இரண்டு கைகளும் மட்டுமே.
ஒரே ஒரு காகிதம்… பல்வேறு வடிவங்களாக உருமாறுகிறது. ஒவ்வொரு மடிப்பையும் மிகுந்த கவனத்தோடு செய்கிறார்கள். மடிப்பு சரியாக அமைய வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பார்த்து, சரிசெய்து, தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இறுதியில் ஒரு வடிவம் உருவாகிறது. அந்த வடிவத்தைப் பார்த்ததும் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி, அவர்களின் முயற்சிக்குக் கிடைக்கும் முதல் வெற்றி.
காகிதத்தை மடிப்பது வெறும் கைவினைச் செயல்பாடு அல்ல. அது குழந்தைகளின் பார்வைத் திறனையும், கை–கண் ஒருங்கிணைப்பையும், கணிதச் சிந்தனையையும், வடிவங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்க்கிறது. எத்தனை மடிப்புகள்? எங்கே மடிக்க வேண்டும்? இருபுறமும் சமமாக இருக்கிறதா? ஒரு மடிப்புக்குப் பிறகு என்ன வடிவம் உருவாகிறது? இப்படி தெரியாமலேயே பல கணிதக் கேள்விகளுக்குக் குழந்தைகள் விடை தேடுகிறார்கள்.
மடித்ததை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்த முறை மீண்டும் செய்வதால் நினைவாற்றலும் வளர்கிறது. தவறாக மடித்தால் அவிழ்த்து மீண்டும் முயற்சிப்பதால் பொறுமையும் வளர்கிறது.
ஒரு சாதாரணக் காகிதம்…
குழந்தையின் கைகளில் ஒரு பறவையாகிறது, ஒரு விலங்காகிறது, ஒரு பொம்மையாகிறது.
சில நேரங்களில் அதற்கும் மேலாக குழந்தையின் கற்பனைக்கு ஒரு வடிவமாகிறது.
***********



Comments