எல்லாவற்றிலும் கலை
Updated: Sep 29

“குழந்தைகளே, வகுப்பறையை விட்டு வெளியே ஓடுங்கள். பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பாருங்கள். கிடைக்கும் காய்ந்த இலைகள், பழைய பேப்பர்கள், பென்சில் துண்டுகள், மரக்குச்சிகள் என்று எதுவாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு வாருங்கள். அவற்றை வைத்து ஒரு கலைப்படைப்பை உருவாக்குங்கள்” என்று சொன்னபோது, குழந்தைகள் ஓடிச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடிக்கொண்டு வந்தார்கள்.
ஒரு குழந்தை ஒரு மனித உருவத்தை முழுமையாக உருவாக்கவில்லை. பாதி வரைந்த ஒரு உடல் மட்டும் இருந்தது. அந்த வரைந்த உடலுக்குத் தலையாகத் தென்னங்குருத்தை வைத்தபோது, அங்கே ஒரு மனிதன் உருவானான். மற்றொரு குழந்தை இரண்டு தென்னங்குருத்துகளை இணைத்து வேறொரு உருவத்தை உருவாக்கியது.
ஒரு பொருளைத் தனியாகப் பார்க்கும்போது அது வெறும் பொருளாகத்தான் தெரியும். ஆனால் ஒன்றோடு ஒன்றை இணைக்கும்போது கலை பிறக்கிறது.
அந்தக் குழந்தைகள் உருவாக்கியது வெறும் கலைப்படைப்பு அல்ல. “என்னிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டே என்னால் ஒன்றை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.
குழந்தைகளிடம் நாம் விதைக்க வேண்டிய மிகப் பெரிய நம்பிக்கைகளில் ஒன்று இதுதான்:
எல்லாவற்றிலும் கலை இருக்கிறது.
எல்லாவற்றிலும் ஒரு படைப்பு இருக்கிறது.
அதைப் பார்க்கும் கண்களும், உருவாக்கும் கைகளும் நமக்குள் இருக்கின்றன.



Comments