top of page

கை கொடுக்கும் கரும்பலகை

Writer: Drama Selvam
Drama Selvam
Sep 29
1 min read

கரும்பலகை என்பது ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு மட்டும் கை கொடுப்பதில்லை; பல சமயங்களில் அது குழந்தைகளின் கற்பனைக்கும் கை கொடுக்கிறது. கலர் பேப்பர் இல்லை. வண்ணக் கிரையான்கள் இல்லை. கலர் பென்சில்களும் இல்லை. ஆனால், காய்ந்த இலைகள் இருக்கின்றன. அவற்றைச் சேகரித்து கரும்பலகையில் ஒட்டியபோது, ஒரு குழந்தை அதன் அருகில் நின்றுவிடுகிறது. அங்கேயே ஒரு வண்ணத்துப்பூச்சி பிறந்துவிடுகிறது.


அந்த வண்ணத்துப்பூச்சிக்கு இறப்பு என்பதே இல்லை. அது கரும்பலகையில் மட்டுமல்ல; அதைப் பார்க்கும் குழந்தைகளின் கற்பனையிலும் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும்.


“இப்படியும் கூட நம்மால் ஒன்றை உருவாக்க முடியும்!” என்ற நம்பிக்கையை அந்தச் சிறிய படைப்பு குழந்தைகளுக்குள் விதைக்கிறது.


இனி அவர்களின் கண்களுக்கு காய்ந்த இலைகள் வெறும் காய்ந்த இலைகளாகத் தெரியாது. மரக்குச்சிகள் வெறும் குச்சிகளாகத் தெரியாது. மரப்பட்டைகள் வெறும் மரப்பட்டைகளாகவும் தெரியாது. அவை அனைத்திலும் ஒரு கலை இருக்கிறது; ஒரு கதை இருக்கிறது; ஒரு புதிய படைப்புக்கான வாய்ப்பு இருக்கிறது.


குழந்தைகளின் கைகளுக்கு விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. அவர்களின் கற்பனைக்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலே போதும். சாதாரணமான பொருட்கள்கூட அவர்களின் கைகளில் அசாதாரணமான படைப்புகளாக மாறிவிடும்.

Comments


bottom of page