கல்வியில் நாடகம் – Theatre in Education

அரியலூர் மாவட்டம், ராம்கோ வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களுக்காக “கல்வியில் நாடகம் – Theatre in Education” என்ற தலைப்பில் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. சமகால வகுப்பறைகளை மேலும் சுறுசுறுப்பானதாகவும், மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையிலும் மாற்றுவதற்காக, பள்ளிப் பாடங்களை நாடகமாக மாற்றி கற்பிக்கும் பல்வேறு யுக்திகள் இப்பயிற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பாடங்களை நாடக வடிவில் எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து நடைமுறை வழிகளில் கற்றுக்கொண்டனர். குறிப்பாக, தமிழ்ப் பாடத்தில் இடம்பெறும் உரையாடல்களை நாடகமாக மாற்றுதல், ஆங்கிலப் பாடங்களை நாடகக் கதை வடிவில் உருவாக்கி மாணவர்களை நடிக்கச் செய்தல், கணிதப் பாடங்களையும் நாடகச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கற்பித்தல் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், “வகுப்பறை அரங்கம்” என்ற புதிய கற்பித்தல் யுக்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மூன்று அல்லது நான்கு மாணவர்களைக் கொண்டு ஒரு பாடத்தையே எளிய நாடகமாக மாற்றி வழங்கும் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஒரு பாடத்தை நாடகமாக மாற்றுவதற்காக அது நான்கு அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
1. கதை உருவாக்கம்
2. பிரச்சனையை அலசுதல்
3. தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
4. முடிவைக் கண்டறிதல்
இந்த நான்கு நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடத்தின் கருத்துகளை ஒரு கதையாக உருவாக்கி, அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, மாணவர்களைக் கொண்டு அதை நாடகமாக நிகழ்த்தும் முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.
இதன் மூலம் ஒரு பாடத்தை நீண்ட விளக்கங்களின்றி, மாணவர்களின் பங்கேற்பு, நடிப்பு, உரையாடல், சிந்தனை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் வழியாக எளிமையாகக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொண்டனர்.
கல்வியில் நாடகம் என்பது மாணவர்களின் உற்சாகமான மனநிலையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பாடக் கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும், நினைவில் நிலைத்திருக்கவும் உதவும் ஒரு பயனுள்ள கற்றல் வாய்ப்பாக அமையும் என்பதை ஆசிரியர்கள் தங்களது பின்னூட்டங்களில் தெரிவித்தனர்.
குறிப்பாக, “இனி எந்தப் பாடத்தையும் எங்களால் நாடகமாக மாற்றி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முடியும்” என்ற ஆசிரியர்களின் பின்னூட்டம், இப்பயிற்சியின் முக்கியமான கற்றல் விளைவாக அமைந்தது.
பாடத்தைக் கற்பிப்பதில் ஆசிரியர் மட்டும் பேசுபவராக இல்லாமல், மாணவர்களையும் கற்றல் செயல்பாட்டின் கதாபாத்திரங்களாகவும் படைப்பாளிகளாகவும் மாற்றுவது வகுப்பறையை உயிரோட்டமுள்ள அரங்கமாக மாற்றும் என்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.



Comments