top of page

கொடிகாத்த குமரன்

Writer: Drama Selvam
Drama Selvam
Sep 29
7 min read

 

 

காட்சி – 1

 

 

நிகிதா  :

 

“1930-களின் இந்தியா…

வெள்ளையரின் ஆட்சி…

உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள்…

தேசியக் கொடியை ஏந்துவதற்குக் கூட தடை…

ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திரத்தின்

விதை முளைத்துக் கொண்டிருந்தது.”

அப்படி முளைத்த ஒரு விதைதான்

நம் குமரன்

ஆம்.. கொடி காத்த குமரன்

இந்த சுதந்திர தின நாளில்

அவர்தம் தியாக வரலாற்றை

நாடகமாக நிகழ்த்துவதில் மகிழ்கிறோம்.. .

 

மிட்டனமல்லி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி

மாணவர்கள் வழங்கும்

 

கொடி காத்த குமரன்

 

 

 

 

 

 

 

காட்சி – 2                                              

 

 

ஹர்ஷவர்தன்  : எத்தனை தலைமுறைகள் இப்படியே அடிமையாக       

                 வாழ்வது?

அஸ்விதா      : நம் பிள்ளைகள் கூட பயத்தோடு வாழ்கிறார்கள்.

தருண்          : ஆம்.. வாயைத் திறந்தால் சிறை… எதிர்த்தால்    

                 தடியடி…

 

(அப்போது குமரன் வருகிறார்.)

 

குமரன்              :  ஏன் இப்படி மனம் தளர்ந்து நிற்கிறீர்கள்?

சக்ரின்          : வெள்ளையர்களை எதிர்க்க யாரால் முடியும்?

கார்த்திக்      : எழுதவும் பேசவும் கூட சுதந்திரம்  

                 இல்லையே..குமரா?

 

குமரன்           : “ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்..

                 பயம் இருக்கும் வரை அடிமை இருக்கும்.

                    மனதில் துணிவு பிறந்தால் சுதந்திரம் பிறக்கும்.”

 

 (அனைவரும் அவரைப் பார்க்கிறார்கள்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி – 3

 

 

தாய்       : குமரா… இங்கே வா.

குமரன்     : சொல்லுங்கள் அம்மா.

தாய்       : ஊரில் எல்லோரும் உன்னைப் பற்றித்தான்

             பேசுகிறார்கள். தினமும் கூட்டம்… போராட்டம்…

             முழக்கம்…எனக்குப் பயமாக இருக்கிறது.

 

குமரன்       : அம்மா… ஒரு தாய் தனது மகனை வளர்க்கிறாள்.

                        ஆனால் இந்தத் தாய்நாடு நம்மை எல்லோரையும்  

                         வளர்க்கிறது.  அதற்காக நான் ஏதாவது செய்ய

                         வேண்டாமா?

 

தாய்             : (கண்களில் கண்ணீர்)

                          நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?

 

குமரன்        : (தாயின் கையைப் பிடித்து)

                         “நான் உங்கள் மகன் மட்டும் அல்ல அம்மா…

                          இந்த மண்ணின் மகனும் கூட.”

 

தாய்      : குமரா…உன் வயதில் நான் குடும்பத்தைப் பற்றி

                        யோசித்தேன்.  நீ நாட்டைப் பற்றி யோசிக்கிறாய்.

                        அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

                       ஆனால் ஒன்று…

                        வீரம் என்றால் கோபம் அல்ல.

                        அறிவோடு சேர்ந்த துணிவுதான் உண்மையான வீரம்.

 

குமரன்        : அம்மா.. நாங்கள் வன்முறைக்குப் போகவில்லை.

                         அமைதியாக நம் உரிமையைக் கேட்கப் போகிறோம்.

 

தாய்       :  அப்படியானால் செல்…

             உண்மை எப்போதும் வெல்லும்.

 

(தாய் ஒரு சிறிய துண்டைப் எடுத்துக்

குமரனின் கையில் கட்டுகிறார்.)

 

தாய்      :  “இது என் ஆசீர்வாதம்…

             எங்கே சென்றாலும் மனிதநேயத்தை மட்டும்

             விடாதே.”

குமரன்   :   உங்கள் ஆசீர்வாதம்தான் எனக்கு மிகப் பெரிய

             ஆயுதம்.

 

(குமரன் வெளியே செல்கிறார்.

தாய் அவரைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார்.)

 

நிகிதா:      “ஒரு தாயின் கண்ணீர்…

             ஒரு இளைஞனின் உறுதி…

             ஒரு நாட்டின் அழைப்பு

             இவை மூன்றும் சேரும்போது வரலாறு

             பிறக்கிறது.”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி – 4

 

(குமரன் வெளியேறுகிறார். அவர் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு தாய் நிற்கிறார். கண்களில் கண்ணீர். அந்த நேரத்தில் குமரனின் மனைவி மெதுவாக உள்ளே வருகிறார்.)

 

மனைவி  :   அத்தே...

(தாய் திரும்பிப் பார்க்கிறார்.)

 

தாய்      : வா மகளே... குமரன் கிளம்பிப் போய்விட்டான்...

 

மனைவி  : (சிறிய புன்னகையுடன்)

             எனக்குத் தெரியும் அத்தே...அவருடைய நடை சத்தம்

             கேட்டாலே...அவர் எங்கே போகிறார் என்று எனக்குப்

              புரிந்துவிடும்.

 

(சிறிது அமைதி.)

 

தாய்         : (கண்கலங்கி)    மகளே...அவன் என் ஒரே மகன்...  

               ஒவ்வொரு முறையும் இப்படிப் போராட்டத்திற்குப்  

               போகும்போது...என் மனம் நடுங்குகிறது...

 

மனைவி     : (தாயின் கையைப் பிடிக்கிறார்.) அத்தே... நீங்கள் ஏன்

               கலங்குகிறீர்கள்? நீங்கள் இன்று அனுப்பியது...

               உங்கள் மகனை அல்ல... இந்த நாட்டின் மகனை.                    

               இன்று நான் அவருடைய மனைவியாகப்  

               பெருமைப்படுகிறேன். நாளை...இந்த நாடே...உங்கள்

               மகனைப் பெருமையாகப் பேசும்.

 

தாய்        : உனக்குப் பயமாக இல்லையா மகளே?

 

மனைவி    : பயம் இருக்கிறது அத்தே...  நானும் ஒரு பெண்

              தானே... என் கணவர் பாதுகாப்பாக வீடு திரும்ப

              வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது...  

              ஆனால்... அவர் வீட்டில் மட்டும் பாதுகாப்பாக

              இருந்தால்... நம் நாடு எப்போது பாதுகாப்பாக

              இருக்கும்?

 

(தாய் ஆச்சரியமாகப் பார்க்கிறார்.)

 

மனைவி    : நான் ஒரு மனைவி... அதற்கு முன்...இந்த மண்ணின்

             மகள். என் கணவர் நாட்டுக்காகச் செல்கிறார்

             என்றால்... அவரைத் தடுத்து நிறுத்த மாட்டேன்...

              நானாக இருந்தாலும்...நீங்கள் செய்ததைப்  

                           போலத்தான்... நெஞ்சைக் கல்லாக்கி... ஆசீர்வதித்தே

               அனுப்பியிருப்பேன்.

 

தாய்       : (கண்ணீர் மல்க)  மகளே... நீ என் மருமகள் இல்லை...

             என் மகள்தான்.

 

மனைவி   : அத்தே... ஒரு வீட்டில் ஒரு தாய்... ஒரு மனைவி...

                           இருவரும் தைரியமாக இருந்தால்தான்...அந்த   

              வீட்டிலிருந்து ஒருவீரன் உருவாக முடியும்.இன்று

              குமரன் மட்டும் போராடவில்லை...அவரோடு

               சேர்ந்து...நம் மனமும் போராடுகிறது.

 

(தாய் மனைவியின் தலையில்

கை வைத்து ஆசீர்வதிக்கிறார்.)

 

தாய்       : இறைவன்...என் மகனையும்...இந்த நாட்டையும்...

             காப்பாற்றட்டும்...

 

மனைவி   : (தேசியக் கொடியை நோக்கிப் பார்க்கிறார்.)

             இந்தக் கொடி... என்றும் தலைநிமிர்ந்து பறக்கட்டும்...

             அதற்காக...தேவைப்பட்டால்...நம் குடும்பத்தின்

             தியாகத்தையும்  இந்த நாட்டுக்கே அர்ப்பணிப்போம்.

 

 

நிகிதா    : "ஒரு வீரன் பிறப்பது போர்க்களத்தில் அல்ல...

            ஒரு தாயின் மடியில்... ஒரு குடும்பத்தின்  

            பண்பில்... ஒரு மனைவியின் புரிதலில்... ஒரு               

            நாட்டின் மீது கொண்ட அன்பில்தான்.சுதந்திரப்

            போராட்ட வரலாறு, போராடிய வீரர்களின்

            வரலாறு மட்டுமல்ல.. அவர்களை மனம்

            கலங்காமல் வழியனுப்பிய தாய்மார்களின்

            வரலாறும்... கண்ணீரை உள்ளத்தில் மறைத்து,

              புன்னகையுடன் அனுப்பிய மனைவியரின்    

              வரலாறும் கூட.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி –  5

 

நிகிதா        :   “நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம்    

                 தீவிரமடைந்தது. காந்தியடிகளின் அறவழிப்  

                 போராட்டம் ஒவ்வொரு கிராமத்திலும்

                 இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது.

                 திருப்பூரிலும் அந்த எழுச்சி பரவியது.”

 

சக்ரின்         :  குமரா… நேற்று ஈரோட்டில் நடந்த போராட்டத்தில்

                 பலரை கைது செய்துவிட்டார்களாம்.

 

கார்த்திக்      :  திருப்பூரிலும் காவலர்கள் கண்காணிப்பை

                 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

 

குமரன்        : அதனால் என்ன?

                நியாயமான போராட்டத்திற்கு பயம்

                இருக்கக்கூடாது.

 

சக்ரின்        :  நம்மை அடித்தால்?

கார்த்திக்      : உடம்பை அடிக்கலாம்…

                உண்மையை அடிக்க முடியாது.

 

சக்ரின்        : நம்மைச் சிறையில் அடைத்தால்?

 

குமரன்       : சிறையில் அடைப்பது உடலைத்தான்…

               சிந்தனையை அல்ல.

 

(அனைவரும் கைத்தட்டுகிறார்கள்.)

 

 

 

 

 

 

காட்சி – 6

 

(ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் வருகிறார்.

அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.)

 

டிஜேஸ் குமார் : வணக்கம்!

 

அனைவரும்   : வந்தே மாதரம்!

 

டிஜேஸ் குமார் :  இளைஞர்களே.. சுதந்திரம் நம் உரிமை.

                 அதைப் பெற நாளை திருப்பூரில் தேசியக்

                 கொடியுடன் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

 

ஹர்சவர்தன்   : வந்தே மாதரம்!

 

டிஜேஸ் குமார் : ஆனால் ஒரு பிரச்சினை இருக்கிறது.

 

தருண்          : என்ன ஐயா?

 

தலைவர்       : ஆங்கிலேய அரசு தேசியக் கொடியை ஏந்தத் தடை

                 விதித்திருக்கிறது.

 

தோழர் 1        : அப்படியானால்… பேரணி எப்படி அய்யா ?

 

(அனைவரும் அமைதியாக நிற்கிறார்கள்.

தலைவர் மெதுவாக முன்வந்து மக்களைப் பார்க்கிறார்.)

 

தலைவர்       : என் அன்பான சகோதரர்களே...நாம் இன்று இங்கே  

                 கூடியிருப்பது ஒரு கூட்டத்தில் கலந்து 

                 கொள்வதற்காக அல்ல... ஒரு நாட்டின்

                 எதிர்காலத்தை எழுதுவதற்காக! இன்று நம்மிடம்

                 இரண்டு வழிகள் இருக்கின்றன... ஒன்று...பயந்து                    

                 வாழ்வது...மற்றொன்று... போராடி வாழ்வது...நான்

                இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்கிறேன் !

                நீங்களும் தயாரா?

 

மக்கள்:          "தயார்!"

 

தலைவர்       :  சகோதரர்களே...

                  அடிமையாக வாழ்வது வாழ்க்கை அல்ல...

                  உரிமையோடு வாழ்வதுதான் வாழ்க்கை!

                  நாம் நமக்காகப் போராடவில்லை...

                  நம் பிள்ளைகளின் நாளைக்காகப்

                  போராடுகிறோம்... நம் தாய்மார்கள் கண்ணீர்

                  சிந்தாமல் வாழ வேண்டும் என்பதற்காகப்

                  போராடுகிறோம்... இந்த மண்ணின்

                  மரியாதைக்காகப் போராடுகிறோம்...

 

                  இன்று இந்தக் கூட்டத்தில் நிற்கும்

                  ஒவ்வொருவரிடமும் நான் ஒரு கேள்வி

                  கேட்கிறேன்... இந்த நாட்டுக்காக நீங்கள் என்ன

                  செய்யப் போகிறீர்கள்? கைதட்டுவதா? வேடிக்கை

                  பார்ப்பதா? இல்லை...வரலாறு படைப்பதா?

 

(சிறிது இடைவெளி)

 

                 நினைவில் கொள்ளுங்கள்...ஒரு வீட்டிலிருந்து

                 ஒரு மனிதன் எழுந்தால் ஒரு குடும்பம் மாறும்...

                 ஒரு தெருவிலிருந்து பத்து பேர் எழுந்தால் ஒரு

                 ஊர் மாறும்...ஒரு நாட்டின் ஒவ்வொரு

                 வீட்டிலிருந்தும் ஒருவர் எழுந்தால்... அந்த

                 நாட்டை எந்த அந்நியனாலும் அடிமைப்படுத்த

                 முடியாது! அதனால்தான் நான் சொல்கிறேன்...

                 ஒவ்வொரு வீட்டிலும்...ஒரு வீரன் பிறக்க  

                 வேண்டும்...  ஒவ்வொரு தாயும்...ஒரு  

                 தேசபக்தனை வளர்க்க வேண்டும்...ஒவ்வொரு

                 இளைஞனும்... "இந்த நாடு என்னுடையது" என்று

                 நெஞ்சை நிமிர்த்த வேண்டும்!

 

                 ஆனால்...இந்தப் போராட்டம் வாளால்      

                 நடத்தப்படுவதில்லை... கத்தியால் 

                 நடத்தப்படுவதில்லை... உண்மையால்

                 நடத்தப்படுகிறது... துணிவால் நடத்தப்படுகிறது...

                 தியாகத்தால் வெல்லப்படுகிறது...நாளை நாம்

                 தேசியக் கொடியை ஏந்தி வீதியில் நடக்கப்

                 போகிறோம்...

 

                 அந்தக் கொடி வெறும் துணி அல்ல...

                 அது நம் சுதந்திரத்தின் உயிர்...

                 அதை ஏந்திச் செல்லத் துணியும் ஒருவர்...     

                 தன் உயிரையும் தாய்நாட்டுக்காக அர்ப்பணிக்கத்

                 தயாராக இருக்க வேண்டும்...

 

(மக்களை ஆழமாகப் பார்க்கிறார்.)

                 சொல்லுங்கள்... இந்தத் தாய்நாட்டின்  

                 மரியாதையைக் காக்க...தேசியக் கொடியைத் தன்

                 உயிரைவிட உயர்வாகக் கருதி ஏந்திச் செல்ல...யார்

                 தயாராக இருக்கிறீர்கள்?

 

(அரங்கில் அமைதி... அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்... அந்த அமைதியை உடைத்து குமரன் மெதுவாக முன்னே வந்து...

 

 

 

 

 

 

 

 

காட்சி – 7

 

(அனைவரும் அமைதியாக நிற்கிறார்கள்.)

 

தலைவர்     : இந்தக் கொடியை யார் ஏந்தப் போகிறார்கள்?

 

யாரும் முன்வரவில்லை.

குமரன் மெதுவாக முன்னே வருகிறார்.

 

குமரன்       : நான் ஏந்துகிறேன்.

 

தலைவர்     : மகனே…இதற்கான தண்டனை சிறையாக

               இருக்கலாம்.

 

குமரன்       : ஏற்றுக்கொள்கிறேன்.

 

தலைவர்     : தடியடியாக இருக்கலாம்.

 

குமரன்      : அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

 

தலைவர்    : உயிரே போகலாம்.

 

(சிறிது நேரம் அமைதி.)

 

குமரன் (உறுதியுடன் ):   “உயிர் ஒருமுறைதான் போகும்…

                        ஆனால் இந்த நாட்டின் சுதந்திரம்

                        தலைமுறைகள் வாழும். என் உயிரைவிட 

 

நிகிதா          : “மறுநாள்… அந்த ஊர்வலம் வரலாறாக

                 மாறப்போகிறது. ஒரு இளைஞனின் பெயர்,

                 தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் நிலைக்கப்

                 போகிறது…”

 

 

காட்சி -  8

 

 

நிகிதா           : “1932 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.

                  திருப்பூர் நகரம்.

                  தேசியக் கொடியை ஏந்துவது தடை

                  செய்யப்பட்டிருந்தாலும், சுதந்திரத்தின் குரலை

                  யாராலும் தடுக்க முடியவில்லை.

                 இளைஞர்கள் அமைதிப் பேரணியாக நகர்ந்தனர்.”

 

 

(ஊர்வலம் தொடங்குகிறது.)

 

அனைவரும் முழக்கமிடுகிறார்கள்:

 

வந்தே மாதரம்!

பாரத் மாதா கி ஜெய்!

வெள்ளையனே வெளியேறு!

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!

 

(குமரன் தேசியக் கொடியை உயரமாக ஏந்திச் செல்கிறார்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி - 9

 

(விசில் சத்தம். காவலர்கள் வந்து வழி மறிக்கிறார்கள்.)

 

அதிகாரி      : நிறுத்துங்கள்!

            இந்த ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை.

                         அனைவரும் உடனே கலைந்து செல்லுங்கள்.

 

(மக்கள் அமைதியாக நிற்கிறார்கள்.)

 

தலைவர் :  நாங்கள் அமைதியான ஊர்வலம்தான் நடத்துகிறோம்.

              எந்த வன்முறையும் இல்லை.

 

அதிகாரி   : தேசியக் கொடியை ஏந்துவது சட்டத்திற்கு எதிரானது.

           அந்தக் கொடியை உடனே கீழே இறக்கு!

 

 

நிகிதா :      “அமைதியாக இருந்த அந்தப் பேரணி…

              சில நொடிகளில் வரலாற்றின் மிகப்பெரிய தியாகக்

              காட்சியாக மாறப்போகிறது. கொடியைக் காப்பதற்காக

              ஒரு இளைஞன் தனது உயிரையே பணயம் வைக்கப்

              போகிறான்.”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி – 9

 

தேசியக் கொடியை குமரன் உறுதியாகப் பிடித்திருக்கிறார். காவலர்கள் எதிரில் நிற்கிறார்கள்.

 

 

நிகிதா    :  “வரலாற்றில் சில நிமிடங்கள்தான்…

             ஆனால் அவை ஒரு தேசத்தின் நினைவில்

             என்றும் அழியாமல் நிற்கின்றன.

             அந்த நிமிடம் இப்போது வந்துவிட்டது.”

 

அதிகாரி  :  (கோபமாக)  நான் கடைசியாகச் சொல்கிறேன்…

            அந்தக் கொடியைக் கீழே போடு!

 

குமரன்   : (கொடியை மார்போடு அணைத்தபடி)

            இந்தக் கொடியை இறக்குவதற்கு முன்…

            என் உயிர் இறங்க வேண்டும்.

 

அதிகாரி   : காவலர்களே… தடியடி நடத்துங்கள்!

 

காவலர் 1 : கொடியை விடு!

குமரன்    :  விடமாட்டேன்!

காவலர் 2 :  இன்னும் அடியுங்கள்!

 

(மீண்டும் தாக்குதல்.)

 

அதிகாரி     : இவன் இன்னும் கொடியை விடவில்லை!

 

காவலர்   1 : சார்…எவ்வளவு அடித்தாலும் விடவில்லை…

 

(குமரன் மெதுவாக மண்டியிட்டு அமர்கிறார். இரு கைகளாலும் கொடியை மார்போடு அணைத்துக் கொள்கிறார்.)

 

 

கொடிகாத்த குமரனின் இறுதி வீர வசனம்

 

(குமரன் பலத்த காயங்களுடன் நிற்கிறார். கையில் தேசியக் கொடி. காவலர்கள் சுற்றி நிற்கிறார்கள். நண்பர்கள் ஓடி வர முயல்கிறார்கள். குமரன் அவர்களை கையால் தடுத்து நிறுத்துகிறார்.)

 

குமரன்:    நில்லுங்கள்.. யாரும் என்னிடம் வர வேண்டாம்…

          இந்தக் கொடியை நான் ஏந்தியது…என் கைகளால்

          மட்டுமல்ல… இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின்

          நம்பிக்கையால்…

 

(சிறிது இடைவெளி)

 

          இந்தக் கொடி…

          வெறும் துணியல்ல…

          இதில் ஒரு விவசாயியின் வியர்வை இருக்கிறது…

          ஒரு நெசவாளியின் உழைப்பு இருக்கிறது…

          ஒரு தாயின் கண்ணீர் இருக்கிறது…

          ஒரு குழந்தையின் எதிர்காலம் இருக்கிறது…

          இந்த மண்ணின் மரியாதை இருக்கிறது…

 

(கொடியை உயர்த்திப் பார்க்கிறார்.)

 

          இந்தக் கொடி உயரமாகப் பறக்க வேண்டும் என்பதற்காக…

          எத்தனை வீரர்கள் தங்கள் உயிரைக்           

          கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? இன்று… அந்த

           வரிசையில்… என் பெயரும் சேருமானால்… 

           அதைவிடப் பெருமை எனக்கு வேறு இல்லை…

 

(காவல் அதிகாரி கத்துகிறார்.)

 

அதிகாரி  :  கொடியைக் கீழே போடு!

        (குமரன் அவரை நேராகப் பார்க்கிறார்.)

குமரன்   :  கீழே போடுவதா?

           இந்த மண்ணில் பிறந்தவன்…

           இந்த மண்ணின் கொடியைக் கீழே போடுவானா?

           உங்களால்…

           என் உடலைத் தாக்க முடியும்…

           என் எலும்புகளை உடைக்க முடியும்…

           என் ரத்தத்தைச் சிந்த வைக்க முடியும்…

           ஆனால்…

           என் நாட்டின் மீதுள்ள அன்பை…

           எந்தத் தடியாலும் உடைக்க முடியாது!

 

(மக்களை நோக்கி திரும்புகிறார்.)

 

          என் அன்பு மக்களே…

          இன்று நான் விழுந்தால்…

          நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்…

          நான் மௌனமானால்…

          உங்கள் குரல் சுதந்திரத்தை முழங்க வேண்டும்…

          நான் கொடியைப் பிடித்த கையை இழந்தால்…

          இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் கையும்…

          இந்தக் கொடியைப் பிடிக்க வேண்டும்…

          நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…

          ஒரு மனிதனை அழிக்க முடியும்…

          ஒரு சிந்தனையை அழிக்க முடியாது…

          ஒரு உடலை வீழ்த்த முடியும்…

          ஒரு நாட்டின் மனஉறுதியை வீழ்த்த முடியாது…

 

(குரல் மெதுவாகத் தளருகிறது.)

 

         

 

 

 

                   என் அம்மாவிடம் சொல்லுங்கள்…

         அவர் வளர்த்த மகன்…

         அழுது சாகவில்லை…

         தலைநிமிர்ந்து வாழ்ந்தான்…

         தலைநிமிர்ந்தபடியே உயிர் துறந்தான்…

         என் தந்தையிடம் சொல்லுங்கள்…

         அவர் கற்றுத் தந்த நேர்மை…

         கடைசி மூச்சுவரை என்னோடு இருந்தது என்று…

 

(கொடியை மார்போடு அணைக்கிறார்.)

 

         இந்த மண்ணில்…

         இன்னும் ஆயிரம்…

         இல்லை…

         இலட்சம் குமரன்கள் பிறப்பார்கள்…

         ஒவ்வொரு தலைமுறையும்…

         இந்தக் கொடியைக் காப்பார்கள்…

         இந்தியாவின் சுதந்திரத்தை…

         யாராலும் தடுக்க முடியாது…

 

(மூச்சு திணறுகிறது.)

 

          என் உயிர்…

          இப்போது…

          இந்த மண்ணுக்கே…

          அர்ப்பணம்…

 

(கொடியை இறுகப் பிடிக்கிறார்.)

 

          வந்தே… மாதரம்…

          பாரத்… மாதா… கி… ஜெய்…

 

Comments


bottom of page